ஆன்லைன் மோசடிகளும் தற்காப்பு வழிகளும் | கற்போம்

ஆன்லைன் மோசடிகளும் தற்காப்பு வழிகளும்


எந்த துறை வளர்கிறதோ அந்த துறையில் அதற்கேற்றார் போல் மோசடி நபர்களும் நுழைவார்கள். இதற்கு இப்போதையை இணையமும் விதிவிலக்கல்ல. தற்போதைய சூழ்நிலையில் மிக அதிகம் பேர் ஏமாறும் துறையும் இது தான். இதில் நடக்கும் சில மோசடிகளையும், அதில் தப்பிக்கும் வழிகளையும் பார்ப்போம். 

1. நேரடியாக பணம் தருவதாக சொல்லும் செய்திகள்

இது கிட்டத்தட்ட அனைவரும் அறிந்த ஒன்று தான். ஏதேனும் ஒரு மின்னஞ்சல் முகவரியில் இருந்து உங்களுக்கு சில கோடிகள் கிடைத்துள்ளது என்றும் அதை உங்களுக்கு அனுப்ப உங்கள் தகவல்கள் வேண்டும் என்றும் கேட்கப்படும். உதாரணம்: லாட்டரி மூலம் பணம் பணம் கிடைத்துள்ளதாக வரும் செய்தி, சாரிட்டிக்கு பணம் தேவை, பேஸ்புக்/மைக்ரோசாப்ட்  கோடிக்கணக்கில் பணம் தருகிறது.

இம்மாதிரியான மின்னஞ்சல்கள் வந்தாலே நீங்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான் Delete பட்டனை அழுத்தி விட்டு உங்கள் வேலையை பார்க்க செல்வது. 

இதே தகவல்கள் SMS வழியாக கூட வரக்கூடும் அவற்றையும் நீங்கள் பொருட்படுத்தக் கூடாது. 

குறிப்பிட்ட சாரிட்டிக்கு உங்களுக்கு உதவ வேண்டும் என்று தோன்றினால், குறிப்பிட்ட சாரிட்டியின் தளத்துக்கே சென்று உதவலாம் அல்லது அதில் இருக்கும் தெரிந்த நபர்களை தொடர்பு கொள்ளலாம். 

நம்பிக்கை இல்லாத பட்சத்தில் எக்காரணம் கொண்டும் குறிப்பிட்ட நபர் ஒருவரின் கணக்கிற்கு பணம் அனுப்பாதீர்கள், சாரிட்டி பெயரில் வங்கிக் கணக்கு இருந்தால் அதற்கு மட்டும் அனுப்புங்கள். 

Paypal, eBay போன்றவற்றில் இருந்து வரும் மின்னஞ்சல்களை போன்று சில மின்னஞ்சல்கள் அனுப்பி உங்களை ஏமாற்றும் முயற்சியும் கூட நடக்கும். எனவே இதில் கொஞ்சம் கவனமாக இருத்தல் நலம். இம்மாதிரியான மின்னஞ்சல் வந்தால் இந்த தளங்களில் உள்ள உங்கள் கணக்கில் நுழைந்து பாருங்கள்,அங்கே உங்களுக்கு தகவல் இருந்தால் மட்டுமே அது உண்மை. இல்லை என்றால் மோசடி தான். 

ஜிமெயில் பயன்படுத்தும் நபர்களுக்கு இந்த இரண்டு தளங்களில் இருந்து மின்னஞ்சல் வந்தால் ஒரு சாவி symbol இருக்கும். 

2. Online Stores/Websites செய்யும் மோசடிகள் 

இந்த மோசடிகள் கொஞ்சம் வித்தியாசமானவை. பெரும்பாலான தளங்கள் உங்களுக்கு Original பொருட்களைத் தான் கொடுக்கின்றன. எனவே அந்த விசயத்துக்கு நான் செல்ல விரும்பவில்லை. குறிப்பிட்ட தளத்தின் மீது சந்தேகம் இருப்பின் Twitter, Facebook, Google Plus போன்றவற்றில் இருக்கும் உங்கள் நண்பர்களிடம் நீங்கள் ஆலோசனை கேட்டுவிட்டு வாங்கலாம். 

உண்மையான மோசடி என்பது 50,000 ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை 500 ரூபாய்க்கு தருவதாக செய்யப்படும் விளம்பரங்கள். நிறைய தளங்கள் இதில் செய்யும் வித்தை, நிறைய பேரை இதற்கு Book செய்ய வைத்து விட்டு யாரேனும் ஒருவர்க்கு மட்டும் குறிப்பிட்ட பொருள் கிடைக்கும் என்று சொல்வது,மற்றவர்கள்  கட்டிய பணத்திற்கு எங்கள் தளத்தில் ஏதேனும் பொருள் வாங்கிக் கொள்ளலாம் என்பது. 

யாரோ ஒருவருக்கு பொருள் கிடைப்பதாக இருந்தாலும், கிடைக்காதவர்கள் எந்த பொருளை வாங்குகிறாரோ அது கண்டிப்பாக மற்ற தளங்களை விட விலை அதிகமாகவே இருக்கும். எனவே இது போன்ற தளங்களை பற்றிய மின்னஞ்சல் வரும் போது அவற்றை தவிர்ப்பது தான் நலம். 

இன்னும் சில தளங்கள் Free Trail, Half Price போன்று பல Offer - களை உங்களுக்கு வழங்குவார்கள். இதிலும் பெரும்பாலும் மோசடியே. உண்மையில் இவர்கள் Hidden Charges என்ற பெயரில் மிக அதிகமான பணத்தை தான் உருவுவார்கள். உண்மையாகவே இலவசம் என்றால் உங்கள் கிரெடிட், டெபிட் கார்டு தகவல்களை கேட்க மாட்டார்கள். 

இதே போல திடீர் என இலவச போன் , கம்ப்யூட்டர் என்று மின்னஞ்சல், SMS வந்தாலும் அவற்றை நீங்கள் கண்டுகொள்ளவே கூடாது. 

ஆன்லைன் ஷாப்பிங் குறித்து ஆன்லைன் ஷாப்பிங் - கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ற பதிவில் விரிவாக காணலாம்.

3. சமூக வலைத்தளங்கள் மூலம் நடக்கும் மோசடிகள் 

நாம் தினமும் பயன்படுத்தும் பேஸ்புக், ட்விட்டர், கூகுள் பிளஸ் போன்றவற்றிலும் நம்மை ஏமாற்றும் முயற்சிகள் நடக்கின்றன. கூகுள் பிளசை விட மற்ற இரண்டும் இதில் கொஞ்சம் அதிகம் தாக்கப்படுகின்றன. 

பேஸ்புக்கை பொருத்தவரை பெரும்பாலானவை Chat மூலமே நடை பெறும். இது வைரஸ் அல்லது நேரடியான மனிதர் மூலம் நிகழும். முதலாவது உங்கள் நண்பர் ஒருவர் திடீர் என ஏதேனும் ஒரு File ஒன்றை உங்களுக்கு அனுப்புவது போல இருக்கும்,அதை கிளிக் செய்தால் டவுன்லோட் ஆகும் அந்த File உங்கள் கணினியில் நீங்கள் சேமிக்கும் தனிப்பட்ட தகவல்களை திருடி விடும். எனவே இது போன்று வரும் போது குறிப்பிட்ட நபரிடம் அது என்ன? பயன்படுத்தி உள்ளாரா, என்பது போன்றவற்றை கேட்டுக் கொள்ளவும், அதை விட முக்கியம் அவர் உங்களுக்கு தெரிந்தவராக இருத்தல் அவசியம். 

இரண்டாவது உங்கள் நண்பர் போல உங்களுடன் பழகும் முகம் தெரியாத நபர் கடவுச் சொல் மற்றும் சில தனிப்பட்ட தகவல்களை கேட்பது.மிகக் குறிப்பாக பணம், வங்கி கணக்கு, கிரெடிட் கார்டு தகவல்கள் கேட்கும் நபர்களை நீங்கள் கண்டிப்பாக சந்தேகப்பட வேண்டும். நீங்கள் உங்கள் பேஸ்புக் பக்கத்தில் பகிரும் தகவல்கள் மூலம் ஒருவர் உங்கள் வரலாற்றையே அறிய முடியும்.  இது போன்று நடப்பின் அந்த நபரை நீங்கள் பிளாக் செய்வது தான் உங்களுக்கு நன்மை. 

பெண்கள் தங்களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கும் நபர்களை கண்டிப்பாக தங்கள் நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்கி விட வேண்டும். இந்த விசயத்தில் கடந்த கால மோசடிகள் பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கும். 

ட்விட்டர் தளத்தை பொறுத்தவரை பெரும்பாலான மோசடிகள் Message மூலமாகவே வரும். எனவே நம்பிக்கை இல்லாத மெசேஜ்களை நீக்கி விடுங்கள். அவற்றில் உள்ள லிங்க்களை கிளிக் செய்யாதீர்கள்.

அடுத்து இந்த இரண்டு தளங்களில் ஏதேனும் வீடியோ, அல்லது போட்டோ போன்றவற்றை பார்க்க குறிப்பிட்ட மென்பொருளை நிறுவ வேண்டும் என்று சொன்னால் அது உண்மையா என்று கவனிக்க வேண்டும். இவற்றில் பெரும்பான்மை மோசடி தான்.Flash Player இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்றால் உங்கள் உலவியில் இருந்தே அதை Update செய்து கொள்ளலாம், அப்படி செய்தும் கேட்டால் அதை தவிர்த்து விடுங்கள். [இது பேஸ்புக், ட்விட்டர் மட்டுமல்ல மற்ற எல்லா தளங்களுக்கும், Youtube என்றால் அது Flash Player இல்லை என்றால் மட்டும் கேட்கும்]

இதே போல ட்விட்டர், பேஸ்புக் போன்றவற்றுக்கு பாஸ்வேர்ட் மாற்றச் சொல்லும் தகவல்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வந்தால் அவற்றின் From Address எது என்று பாருங்கள். அது பொய்யான முகவரி என்றால் அல்லது சந்தேகம் இருப்பின் அந்த மின்னஞ்சலை டெலீட் செய்து விட்டு நேரடியாக பேஸ்புக், ட்விட்டர்க்கு சென்று பாஸ்வேர்டை மாற்றுங்கள். அது தான் பாதுகாப்பு. 

4. ஆன்லைன் ஜாப்ஸ்/ ஜாப் தளங்கள்

உலகிலேயே இணைய தளம் மூலம் அதிகம் பேர் ஏமாந்தது இதுவாகத் தான் இருக்கும். வீட்டில் இருந்தே ஆயிரம் ஆயிரமாக சம்பாதிக்கலாம் என்று வரும் மின்னஞ்சல்களை கண்ணை மூடிக் கொண்டு டெலீட் செய்து விடுங்கள். 

இவை பெரும்பாலும் ஆரம்பத்தில் உங்களிடம் குறிப்பிட்ட அளவு பணம் கட்ட சொல்வார்கள்,அதன் பின் அவர்கள் அனுப்பும் பொருளை வைத்து நீங்கள் ஒன்றும் சம்பாதிக்க முடியாது அல்லது குறிப்பிட்ட வேலை குறிப்பிட்ட வேலை மூலம் உங்களுக்கு வருமானம் வராது.

ஆன்லைன் ஜாப்க்கு நம்பிக்கையான தளம் என்றால் elance.

அடுத்ததாக பெரிய நிறுவனங்களில் வேலை வாய்ப்பு இருப்பதாக சொல்லும் மின்னஞ்சல்கள், தளங்கள் போன்றவற்றை நீங்கள் எப்போதும் சந்தேகக் கண்ணுடன் தான் பார்க்க வேண்டும். இம்மாதிரியான தளங்கள் ஆரம்பத்தில் குறிப்பிட்ட அளவு பணம் கட்ட சொல்லி கேட்டால் அவற்றை புறக்கணித்து விடுவதே நலம். 

இதே போல நம்பிக்கை இல்லாத கன்ஸல்டிங் கம்பெனிகளுக்கும் பணம் செலுத்துவதை தவிர்க்கவும்.

SMS, EMail பெறுவதன் மூலம் சம்பாதிக்கலாம் போன்றவை உங்கள் ஈமெயில் முகவரி, மொபைல் நம்பர்களை மற்றவர்களுக்கு விற்க வாய்ப்புள்ளது. எனவே அது போன்ற தளங்களையும் தவிர்க்கலாம்.

5. Credit Card மோசடிகள் 

இது மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது போன் மூலமாகவோ நடக்கும். உங்கள் Credit தகவல்களில் கொஞ்சம் Update, Change என்று சொல்லு உங்கள் Card Number, CVV, Name போன்றவற்றை கேட்டு உங்களை ஏமாற்றுவார்கள். இது போன்றவற்றை நீங்கள் உடனடியாக புறக்கணிக்க வேண்டும். 

பொதுவாக இந்த தகவல்களை வங்கி ஊழியரே கேட்டால் கூட நீங்கள் தரக்கூடாது. Card தொலைந்து போனால் தவிர. 

இந்த தகவல்களை மாற்ற முடியாது, சிலவற்றை மாற்ற வேண்டும் என்றால் வங்கியின் தளத்துக்கே சென்று மாற்றுங்கள். மின்னஞ்சல் மூலம் அதை செய்யாதீர்கள். 

-----------------------------------------------------------------------------

இவையே பொதுவாக நடக்கும் மோசடிகள். எல்லாவற்றையும் கவனித்தால் உங்களுக்கு ஒரு விசயம் புலப்படும் எல்லாமே பண மோசடிதான். எனவே நம்பிக்கை இல்லாத தளமோ, நபரோ, மின்னஞ்சலோ பணப் பரிமாற்றம் குறித்த செய்திகளை அனுப்பினால் அதனை நம்ப வேண்டாம். சொல்லப் போனால் பெரும்பாலான மோசடிகளுக்கு இது தான் தற்காப்பு வழி.

இது எவ்வாறெல்லாம் ஏமாற்றுகள் நடக்கிறது என்பதை சொல்லும் பொதுவான பதிவு மட்டுமே. இதில் குறிப்பாக சிலவற்றை விளக்கி எழுத வேண்டி உள்ளது. இப்போதைக்கு பதிவின் நீளம் கருதி முடித்துக் கொள்கிறேன். 

குறிப்பிட்ட ஏமாற்று செய்திகளை வரும் பதிவுகளில் காண்போம். 

- பிரபு கிருஷ்ணா

12 comments

விரிவான பயனுள்ள தகவல்கள்!

Reply

இணையை மோசடிகள் குறித்து தெரியாதவர்களுக்கு மிகவும் அவசியமான விளக்கமான தெளிவான பதிவு.

Reply

அருமையான எச்சரிக்கை பதிவு காலத்திற்கேற்ற பயனுள்ள தகவல். மிக்க நன்றி பிரபு.

Reply

அன்பின் பிரபு கிருஷ்ணா - அரிய தகவல்கள் - பயனுள்ள தகவல்கள் - பகிர்வினிற்கு நன்றி -நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Reply

நல்ல உபயோகமான தகவல் .நன்றி

Reply

விழிப்புணர்வை ஏற்படுத்துகிற பதிவு...

இந்தக் காலத்துல நேர்ல பார்த்து பழகறவங்களையே நம்ப முடியல.. இதுல முகம் தெரியாதவங்கள ஆன்லைன்ல எல்லாம் நம்பி :-)

Reply

ரொம்ப பயனுள்ள விவரங்கள். நன்றி.

elance.com ப்ரோக்ராம் தெரிந்தவர்களுக்கு மட்டும்தான் பயன்படுமா? இணையத்தில் வருமானம் ஈட்ட வேறு ஏதேனும் வழி உள்ளதா.? தயவு கூர்ந்து பதில் அளியுங்கள் அண்ணே.

Reply

elance - இல் பல வித வேலைகிடைக்கும். அது தான் நம்பிக்கையான ஒன்று.

Reply

Please tell one more thing......how to identify a facebook account from which, we have received friend requests, is fake or not?

Reply

Post a Comment